நெல்லை, அம்பை அருகே பொத்தை பகுதியை சேர்ந்தவர் இசக்கிப்பாண்டி (30). இவருக்கும், ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் பகுதியை சேர்ந்த மகாலெட்சுமி (30) என்வருக்கும் திருமணமாகி உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகாலெட்சுமி நெட்டூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் நேற்று இரவு இசக்கிப்பாண்டி தனது நண்பர் ஒருவருடன் நெட்டூரில் உள்ள தனது மனைவியின் வீட்டுக்கு சென்றுள்ளார். மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்து உள்ளார். ஆனால் மகாலெட்சுமி வர மறுத்ததாகவும், இதனால் இசக்கிப்பாண்டி தனது நண்பருடன் சேர்ந்து தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் நெட்டூர் புறக்காவல் நிலையத்தில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு இரவு பணியில் இருந்த ஆலங்குளம் அருகே உள்ள கடங்கநேரியை சேர்ந்த போலீஸ் ஏட்டு முருகன்(38) மற்றும் ஒரு பெண் போலீஸ் அங்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் ரகளையில் ஈடுபட்டிருந்த இசக்கிப்பாண்டியை கண்டித்தனர். அங்கு நடந்த சம்பவங்களை வீடியோவாக போலீசார் பதிவு செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இசக்கிப்பாண்டி வீடியோ எடுக்க வேண்டாம் என போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டதாகவும், ஒரு கட்டத்தில் அரிவாளால் ஏட்டு முருகனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஏட்டு முருகன் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து ஓட்டம் பிடித்ததாகவும், சுமார் அரை கிலோ மீட்டர் ஏட்டுவை இசக்கிப்பாண்டி கொலை வெறியுடன் விரட்டிச் சென்றதாகவும் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியுடன் தெரிவித்தனர்.
இசக்கிப்பாண்டியிடம் இருந்து தப்பிய ஏட்டு முருகன் அதுகுறித்து ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பின்னர் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தார். மேலும் போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், துணை போலீஸ் சூப்பிரண்டு கிளாட்சன் ஜோஸ் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்ற முத்துப்பாண்டியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
