‘மக்களே வெளிய மட்டும் வந்துடாதீங்க’, ‘இன்னைக்கு ரெட் அலர்ட்’, ‘இலங்கையில் டிட்வா புயலால் 300 பேர் பலி’, என்ற செய்திகள் ஒரு சில நாட்களாக நம் காதுகளை துளைத்து இதயங்களை படபடக்க வைக்கிறது. மட்டுமல்லாமல் டிட்வா புயல் ஒரு வழியாக கரையை கடந்துவிட்டது என்று நிம்மதி அடைய முடியாத நிலைதான் இப்போதும் இருக்கிறது. ஏன் இந்த ட்விஸ்ட் என்று பார்க்கலாம்.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தை தொடர்ந்து தாக்கம் செலுத்தி வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாறிய நிலையில், அதற்கு ‘டிட்வா’ என பெயரிடப்பட்டது. இந்த புயல் முதலில் இலங்கை கரையை தாக்கியதால், அங்கு அதி கனமழை பொழிந்து கடும் சேதம் ஏற்பட்டது. இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல். டிட்வா புயல் வடக்கு திசை நோக்கி நகர்ந்து தமிழகத்தை நெருங்கி வந்தது.
டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நேற்று முழுவதும் கனமழை பதிவானது. இருப்பினும், டிட்வா புயல் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக பலவீனமடைந்ததால், அதன் தாக்கம் குறைந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மீது இதன் பாதிப்பு தொடரும் என்று வெதர்மேன் பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது பதிவின்படி, ‘பலவீனமான டிட்வா புயல் அடுத்த இரண்டு நாட்கள் சென்னை கடற்கரை அருகே நிலைத்து இருக்கும். இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை தீவிரம் காணப்படும். சில நேரங்களில் கனமழையும் இருக்கும்,’ என்றார்.
மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, டெல்டா, மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான முதல் மிதமான மழை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இந்திய வானிலை மையம் வெளியிட்ட தகவலின்படி, நவம்பர் 30 இரவு 11.30 மணிக்கு டிட்வா புயல் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்தது. தற்போது அது சென்னை தென்கிழக்கே சுமார் 90 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. நாளை மதியம் வரை இது மேலும் பலவீனமடைந்து தாழ்வு மண்டலமாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.
