பா.ம.க.,வில் நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஓராண்டாக மோதல் நீடிக்கிறது. இரு பிரிவாக கட்சி செயல்படும் நிலையில், அன்புமணியை தலைவராகவும், அவரது தரப்பை பா.ம.க.,வாக அங்கீகரித்தும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இதனால் அதிருப்திக்கு உள்ளாகி இருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி குறித்து மனவருத்தத்துடன் பேசியிருக்கிறார்.
இதுகுறித்துப் பேசியிருக்கும் ராமதாஸ், “என் உயிரைத்தான் அவர் (அன்புமணி) பறிக்கவில்லை. மீதி எல்லாவற்றையும் பறித்து விட்டார். உரிமையைப் பறித்தார். நான் சிந்திய வியர்வை வீணாகிப் போய்விட்டது. உரிமையை இனி யாரும் பறிக்க முடியாது.
சூழ்ச்சி செய்து, தன்னை பா.ம.க., தலைவர் என, அன்புமணி சொல்லியிருக்கிறார். வன்னியர் உள்ளிட்ட ஒட்டுமொத்த தமிழக மக்களும், மற்ற அரசியல் கட்சிகளும் அவரது சூழ்ச்சியை புரிந்து கொண்டுள்ளனர்.
பணம் பத்தும் செய்யும் நான் வளர்த்த கட்சியை அன்புமணி அபகரிக்க பார்க்கிறார். அதை அனுமதிக்க முடியாது. எனக்கு உதவியாக, என் மூத்த மகள் ஸ்ரீகாந்தியை பா.ம.க., செயல் தலைவராக நியமித்துள்ளேன்.
தலைமை தேர்தல் கமிஷனில் வேண்டுமானால் அன்புமணி வெற்றி பெறலாம். ஆனால், என் பக்கம் மக்கள் இருக்கின்றனர்; நீதி, நியாயம் இருக்கிறது. நீதி வெற்றி பெறும்.
நான் வயிறு எரிந்து சொல்கிறேன். அன்புமணியின் அரசியல் பயணம் முடிந்து விட்டது. இனி வெல்லப் போவது நான்தான். என் உழைப்பை, உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது என அவர் பேசினார்.
