Monday, December 1, 2025

இரவை பகலாக்க வரும் ‘கோல்ட் மூன்’! இந்த ஆண்டின் கடைசி சூப்பர் மூன்! மிஸ் பண்ணாதீங்க!

வானியல் காதலர்களுக்கு சூப்பர் செய்தி ! கடந்த மாதம் வானத்தை அலங்கரித்த அந்த பிரம்மாண்டமான ‘சூப்பர் மூனை’ பார்த்து ரசித்தீர்களா? ஒருவேளை அந்த வாய்ப்பை நீங்க தவறவிட்டிருந்தா, கவலைப்படாதீங்க! இயற்கை உங்களுக்காகவே இன்னொரு மெகா சான்ஸை கொடுக்குது. ஆமாங்க, இந்த 2025-ஆம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன், நம்மளை வியப்பில் ஆழ்த்தத் தயாராகிவிட்டது!

வடக்கு அரைக்கோளத்தில் இப்போது குளிர்காலம் என்பதால், இந்த டிசம்பர் மாத நிலவுக்கு, ‘கோல்ட் மூன்’ (Cold Moon), அதாவது ‘குளிர் நிலவு’ என்று ஒரு அழகான பெயர் சூட்டப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 5-ஆம் தேதி, இந்த கோல்ட் மூன், வானில் 100% முழுமையாக ஒளிர்ந்து, இரவை பகலாக்கப் போகிறது. இது ஒரு சாதாரண பவுர்ணமி இல்லை. பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றிவரும் நிலவு, பூமிக்கு மிக மிக அருகில், அதாவது சுமார் 3 லட்சத்து 63 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் வரும்போதுதான், இந்த ‘சூப்பர் மூன்’ அதிசயம் நிகழ்கிறது.

நவம்பர் மாதம் வந்த ‘பீவர் மூன்’ தான் இந்த ஆண்டின் மிகப்பெரிய நிலா என்றாலும், இந்த டிசம்பர் நிலவும் சளைத்தது அல்ல. இது, இந்த ஆண்டின் இரண்டாவது மிகப்பெரிய மற்றும் பிரகாசமான நிலவாக இருக்கும். நாசாவின் கணிப்புப்படி, ஆண்டின் மிகச் சிறிய நிலவை ஒப்பிடும்போது, இந்த கோல்ட் மூன், 14% அதிகப் பெரிதாகவும், 30% அதிகப் பிரகாசத்துடனும் காட்சி அளிக்கும்!

சரி, இந்த அதிசயத்தை எப்போ, எப்படிப் பார்க்கிறது? இந்த அழகை முழுமையாக ரசிக்க, மாலை நேரத்தில் சூரியன் மறைந்த பிறகு, நிலவு அடிவானத்தில் (Horizon) உதயமாகும் அந்தத் தருணத்தைப் பார்ப்பதுதான் சிறந்த சாய்ஸ்! ‘மூன் இல்லூஷன்’ (Moon illusion) என்ற ஒரு நிகழ்வால், அடிவானத்தில் இருக்கும்போது நிலவு வழக்கத்தை விடப் பெரிதாகத் தெரியும் காட்சி, நம் கண்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக அமையும்.

இந்த நிலவுக்கு ‘கோல்ட் மூன்’னு மட்டும் பேர் இல்ல. இது, ஆண்டின் மிக நீண்ட இரவான ‘குளிர்கால சங்கிராந்திக்கு’ (Winter Solstice) அருகில் வருவதால், இதற்கு ‘நீண்ட இரவுகளின் நிலவு’ (Long Night’s Moon) என்றும் ஒரு பெயர் உண்டு. இதுதவிர, ‘பனி நிலவு’, ‘மரங்கள் வெடிக்கும் பனி நிலவு’ எனப் பல சுவாரசியமான பெயர்களும் இதற்கு உண்டு.

கடைசியாக ஒரு முக்கியமான விஷயம். நிலவு பூமிக்கு மிக அருகில் வருவதால், அதன் ஈர்ப்பு விசை காரணமாகக் கடலில் அலைகளின் சீற்றம், வழக்கத்தை விடச் சற்று அதிகமாகவே இருக்கும். எனவே, கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், கொஞ்சம் விழிப்புடன் இருப்பது நல்லது.

மொத்தத்தில், 2025-ஆம் ஆண்டின் கடைசி வானியல் அற்புதம், நம்மளை பிரமிக்க வைக்கக் காத்துட்டு இருக்கு. இந்த வாய்ப்பை யாரும் மிஸ் பண்ணாதீங்க. உங்க மொட்டை மாடியில இருந்தோ, பால்கனியில இருந்தோ இந்த கோல்ட் மூனைப் பார்த்து ரசிங்க!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News