இதுவரை பிஎப் கணக்கு இல்லாத ஊழியர்களுக்கும், தங்கள் ஊழியர்களை பிஎப்பில் சேர்க்காத நிறுவனங்களுக்கு மத்திய அரசு, இபிஎப்ஓ சேர்ந்து ஒரு மிகப்பெரிய வாய்ப்பை வழங்கியுள்ளன. இதுநாள் வரை எப் கணக்கு இல்லாமல், பணிப் பலன்கள் கிடைக்கப்பெறாமல் இருந்த ஊழியர்கள் இப்போது உடனே தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உறுப்பினராகலாம்.
இத்திட்டத்தின் பெயர் ஊழியர் சேர்க்கை திட்டம் – 2025 ஆகும் (Employees’ Enrolment Scheme – 2025 – EES 2025). மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், நவம்பர் 1, 2025 முதல் ஏப்ரல் 30, 2026 வரை 6 மாத காலத்திற்கு நடைமுறையில் இருக்கும். உடனே, உழியர்கள் முறையாக விண்ணப்பித்து இத்திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.
இந்தச் சலுகையைப் பெற தகுதியுள்ள ஊழியர்கள் யார் ? என்றால், ஜூலை 1, 2017 முதல் அக்டோபர் 31, 2025 வரையிலான காலகட்டத்தில் ஒரு நிறுவனத்தில் பணியில் சேர்ந்து, ஆனால் EPF திட்டத்தில் சேர்க்கப்படாத அனைத்து ஊழியர்களுமே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தகுதியானவர்கள்.
இந்தத் திட்டத்தின் மூலம், இதுவரை PF-ல் சேர்க்கப்படாத ஊழியர்கள் மீண்டும் EPF திட்டத்தில் இணைக்கப்படுவார்கள். இதன் விளைவாக, அவர்களுக்கு முறையான சமூகப் பாதுகாப்பு, ஓய்வூதியச் சேமிப்பு (Pension Benefits) மற்றும் முறைப்படுத்தப்பட்ட பணியாளராக இருப்பதன் மூலம் கிடைக்கும் அனைத்து வருங்கால வைப்பு நிதி நன்மைகளும் முழுமையாகக் கிடைக்கும்.
