கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தை சேர்ந்தவர் லதா (வயது 23). இவருக்கு, குருராஜ் என்பவருடன் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணமான சில நாட்கள் தம்பதியினர் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். பின்னர், லதாவை குருராஜ் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கொடுமைப்படுத்தியும், மனரீதியிலான தொல்லைகளும் கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் லதாவிடம் இருந்து செல்போன் அழைப்பு ஏதும் வராததால், அவரது பெற்றோர் குருராஜின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது லதா அங்கு இல்லை என தெரியவந்தது. இதனால், சந்தேகமடைந்த லதாவின் பெற்றோர், தங்கள் மகளை காணவில்லை என போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் போில் வழக்குப்பதிவு செய்த போலீசார லதாவை தேடினர். அப்போது பத்ராவதி நீர்ப்பாசன கால்வாயின் கரையோரம் லதாவின் செல்போன், காலணிகள் கிடந்தன. இதையடுத்து, செல்போனை போலீசார் கைப்பற்றினர். அதில், எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமையால் நான் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொள்கிறேன் என இருந்தது.
இதையடுத்து, நீர்ப்பாசன கால்வாயில் ரப்பர் படகுகள் மூலம் லதாவின் உடலை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
