செயற்கை நுண்ணறிவு (AI) நம் வாழ்க்கையை எளிதாக்கி வரும் நிலையில், அதையே சிலர் தவறாக பயன்படுத்தி மோசடிகளுக்கும் இடம் கொடுத்து வருகிறார்கள்.
அதற்கு உதாரணமாக, ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் ஒரு ட்ரே முட்டை ஆர்டர் செய்த ஒருவர், அதில் ஒரு முட்டை மட்டுமே உடைந்திருந்தது. வழக்கம்போல புகார் அளிப்பதற்குப் பதிலாக, அவர் சற்று வித்தியாசமான முறையை தேர்வு செய்துள்ளார். உடைந்த ஒரு முட்டையின் படத்தை கூகுள் ஜெமினி (Gemini) AI-க்கு கொடுத்து, அதே படத்தை பல முட்டைகள் உடைந்ததாகக் காட்டும் போலி படமாக மாற்றியுள்ளார்.
அந்த AI உருவாக்கிய படத்தை ஸ்விக்கியின் கஸ்டமர் சப்போர்ட்டுக்கு அனுப்பியதும், அது உண்மைப்படம் என நம்பிய ஸ்விக்கி முழு பணத்தையும் உடனே ரீபண்ட் செய்துவிட்டது.
இந்த சம்பவத்தை கபிலேஷ் என்ற நபர் தனது X (Twitter) கணக்கில் பகிர்ந்துள்ளார். அவர் தனது பதிவில்,
“ஒரே ஒரு முட்டை மட்டுமே உடைந்திருந்த நிலையில், ஜெமினி AI சில விநாடிகளில் 20-க்கும் மேற்பட்ட முட்டைகள் உடைந்தவாறு போலி படத்தை உருவாக்கியது. கஸ்டமர் சப்போர்ட் அதை உண்மையாக நம்பி முழு பணத்தையும் திருப்பிக் கொடுத்தது. AI காலத்தில் புகைப்படமே ஆதாரம் என்ற உண்மை தற்போது சவாலாக மாறியுள்ளது. இதுபோன்ற மோசடிகள் அதிகரித்தால் டெலிவரி நிறுவனங்களே பெரிய பிரச்சினையில் சிக்கிவிடும்,” என எழுதியுள்ளார்.
சில நெட்டிசன்கள், “இது தவறான செயல்; உண்மையில் பிரச்சினை ஏற்பட்டாலும் ரீபண்ட் பெற முடியாத நிலையே உருவாகும்,” என்று எச்சரித்தனர். இந்த பதிவு இணையத்தில் அதிவேகமாக வைரலாகி, பலரும் அதிர்ச்சி மற்றும் கோபத்துடன் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
AI வளர்ச்சி மனிதர்களுக்கு பெரிய உதவியாக இருந்தாலும், இவ்வாறான தவறான பயன்பாடுகள் எதிர்காலத்தில் நம்பிக்கையையும், சேவை நிறுவனங்களின் செயல்பாடையும் கேள்விக்குறியாக்கக் கூடும் என்பதில் நிபுணர்களும் நெட்டிசன்களும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
