சென்னை மாநகராட்சியின் ஐந்து, ஆறாவது மண்டலத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அம்பத்தூரில் உள்ள உழைப்போர் உரிமை இயக்கத்தில் நான்கு பெண் தூய்மை பணியாளர்கள் காலவரையறையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவை பெற்று பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த உண்ணாவிரதம் தொடங்கியுள்ளது. போராட்டத்தில் பாரதி, கீதா, ஜெனோவா மற்றும் வசந்தி ஆகிய நான்கு பெண் தூய்மை பணியாளர்களும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உண்ணாவிரத போராட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தூய்மை பணியாளர் பாரதி, “நாங்கள் பத்தாண்டுகளுக்கு மேல் சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களாக பணிபுரிந்து வந்தோம். ஆனால் திடீரென ஆகஸ்ட் ஒன்றாம் தேதி எங்களை பணியிலிருந்து செல்லுமாறு கூறிவிட்டனர். ஏன் என்று கேட்கும் போது தூய்மை பணியாளர்களை தனியார் நிறுவனத்திற்கு மாற்றி விட்டதாகவும் அவர்களிடம் சென்று பணி புரியும் மாறும் கூறினார்கள்.
அதனை ஏற்க மறுத்து நாங்கள் ஆகஸ்ட் மாதம் 13 நாட்கள் ரிப்பன் மாளிகையில் போராட்டம் நடத்தினோம். அதைத்தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்திவிட்டோம். சமீபத்தில் கூட கடலில் இறங்கி உயிரை பணயம் வைத்து போராட்டம் நடத்தினோம். ஆனாலும் தமிழக அரசு எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை.
நாங்கள் என்ன தவறு செய்தோம் என்றே தெரியவில்லை. எதற்காக எங்களை பணியை விட்டு அனுப்பினார்கள். உங்களுடன் ஸ்டாலின் என்று கூறும் முதலமைச்சர் எங்களுடன் வரவில்லை. எங்களது கோரிக்கையை முதலமைச்சர் கேட்க வேண்டும். நான்கு மாதங்களாக 2000 குடும்பத்தினர் உண்ணாவிரதத்தில் தான் உள்ளனர்.
மூன்று வேளைக்கு பதிலாக ஒருவேளை தான் உணவு சாப்பிட்டு வருகிறோம். எங்களுக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும். தொடர்ந்து போராடிவரும் எங்களுக்கு துணைப்போர் உரிமை இயக்கம் தான் துணையாக நிற்கின்றது. எங்களுக்கு அரிசி முதலியவற்றை கொடுத்து உதவியுள்ளனர். கூடிய விரைவில் முதலமைச்சர் எங்கள் கோரிக்கையை கேட்டு பதில் அளிக்க வேண்டும். 15 வருடங்களாக பணிபுரிந்த எங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும்” என்று கோரிக்கையை முன் வைத்தார்.
