பெங்களூருவில் சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது கார் ஒன்று வேண்டுமென்றே மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் அக்டோபர் 26 அன்று வடக்கு பெங்களூருவில் உள்ள ராமையா கல்லூரி அருகே நடந்துள்ளது.
ஆரம்பத்தில் இது விபத்தாக பதிவு செய்யப்பட்டிருந்தது. பின்னர் கிடைத்த சிசிடிவி காட்சிகள், அது தற்செயலாக நடந்த விபத்து அல்ல, உள் நோக்கத்துடன் வேண்டுமென்றே செய்யப்பட்ட மோதல் என்பது தெரிய வந்தது.
சுக்ருத் கேசவ் என்பவர் காரை ஓட்டி சென்றுள்ளார். அப்போது ஸ்கூட்டரில் வந்த வினோத் என்ற நபர் ஹாரன் அடித்துள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர், ஹாரன் சத்தத்தால் கோபமடைந்த சுக்ருத், ஸ்கூட்டரைத் துரத்திச் சென்று தனது காரை வைத்து அவர்கள் மீது வேண்டுமென்றே மோதினார். இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற அந்த குடும்பம் தடுப்புச் சுவரில் பலமாக மோதியது. அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், சுக்ருத் கேசவை கைது செய்தனர். மேலும் அவருடைய கார் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதுடன், சமூக வலைதளங்களில் பெரும் பேசு பொருளாகவும் மாறியுள்ளது.
