IPL 2026 ஆம் ஆண்டு சீசனுக்காக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடமிருந்து, சஞ்சு சாம்சனை வாங்கி இருக்கிறது. அதற்கு பதிலாக ஜடேஜா மற்றும் ஷாம் கரணை CSK அணி ராஜஸ்தானிடம் வழங்கியிருக்கிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை CSK வெளியிட்டுள்ளது.
அணிகள் தக்கவைத்தல் & விடுவிப்பு பட்டியலை மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்பதால், பல அணிகள் தீவிரமாக பேச்சுவார்த்தைகள் நடத்திய நிலையில், CSKமிகப் பெரிய மாற்றங்களுடன் முன்னேறியுள்ளது.
அந்த வகையில், ஐந்து முறை சாம்பியனான சென்னை அணியில் இருந்து ஆல்-ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோரை ராஜஸ்தான் அணிக்கு அளித்து அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை சென்னை அணி பெற்றுள்ளது.
நியூசிலாந்து ஜோடியான கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோரை CSK அணி விடுவித்து இருக்கிறது. மேலும், இந்திய வீரர்களான ராகுல் திருப்பாதி, விஜய் சங்கர், தீபக் ஹூடா ஆகிய வீரர்களும் அணியை விட்டு விடுவிக்கப்பட இருக்கின்றனர்.
கடந்த சீசனில் ரச்சின் 191 ரன்களும், கான்வே 156 ரன்களும் மட்டுமே எடுத்ததால், இருவரும் ரிலீஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின், ஓய்வு பெற்றிருப்பதால் ஒன்பது கோடியே 75 லட்சம் ரூபாய் CSK அணிக்கு இருக்கும் என்கின்றனர். இதனால், வரும் மினி ஏலத்தில் CSK அணிக்கு மொத்தமாக 30 அல்லது 31 கோடி ரூபாய் இருக்கும் என்று தெரிகிறது.
அதை வைத்துக்கொண்டு CSK அணி ஜடேஜாவுக்கு மாற்றான ஒரு சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் மற்றும் நடு வரிசையில் ஒரு வெளிநாட்டு வீரர் ஆகியோரை வாங்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது. CSK அணி மேக்ஸ்வெல், லியாம் லிவிங்ஸ்டோன் போன்ற வெளிநாட்டு வீரர்களை வாங்க முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
