அரியலூர் மாவட்டம் வாரணவாசியில் கேஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி ஒன்று விபத்தில் சிக்கியது. லாரியின் வளைவில் திரும்பும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
அப்போது லாரியில் இருந்து சிலிண்டர்கள் பலத்த சத்தத்துடன் வெடித்ததால் பல கிலோமீட்டர் தூரத்திற்கு சத்தம் கேட்டது. இந்த நிலையில், அந்தப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக உள்ளது. இதனால் அந்தப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இச்சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் சிலிண்டர்கள் வெடித்து சிதறுவதால் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம்மடைந்தனர்.
தீ விபத்துக்குள்ளான சிலிண்டர் லாரியில் இருந்து ஓட்டுநர் கனகராஜ் என்பவர் குதித்து உயிர் தப்பியுள்ளார். லாரியில் இருந்து குதித்ததில் அவரது தலையில் பலத்த காயமடைந்துள்ளார். இந்த நிலையில், அவரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும, இந்த விபத்து காரணமாக அரியலூரில் இருந்து திருச்சி, தஞ்சாவூர் மாவட்டத்துக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டது. மாற்று வழியில் அனுப்பப்படுகிறது.
