கோவை விமான நிலையம் அருகே உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் 21 வயது கல்லூரி மாணவி மற்றும் அவரது ஆண் நண்பர் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், காரின் கண்ணாடியை உடைத்து மாணவியின் ஆண் நண்பரை கடுமையாக தாக்கினர். தாக்குதலில் ஆண் நண்பர் படுகாயமடைந்து மயங்கி விழுந்தார்.
அடுத்ததாக, அந்த 3 பேர் மாணவியை மறைவான இடத்துக்கு கொண்டு சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முற்புதர் அருகே அரைகுறை ஆடையுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆண் நண்பரும் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த கொடூர சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தக் சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கோவையில் பா.ஜ.க.வினர் மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து செஞ்சிலுவை சங்கம் அருகே தீப்பந்தம் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பா.ஜ.க. தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
