திருச்சி எம்.பி துரை வைகோ திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது :
பீகாரில் நடந்த எஸ்.ஐ.ஆர் குறித்து உச்ச நீதிமன்றம் சில கேள்விகளை கேட்டுள்ளது முழுமையான விவரஙகளை தேர்தல் ஆணையம் கொடுக்கவில்லை. இந்த சூழலில் தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்கள். வட கிழக்கு பருவமழை, பண்டிகை காலத்தில் இது அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரிகளுக்கும் பல சிரமங்கள் ஏற்படும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.
தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் உள்ள நிலையில் அவசரஅவசரமாக இதை மேற்கொள்ள கூடாது. அப்படி செய்தால் பீகாரில் நடைபெற்றது பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படும் நிலை ஏற்படும். எனவே இதற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும்.
தமிழ்நாடு வந்தாரை வாழ வைக்கும் மண். தமிழ்நாட்டில் பீகார் மக்கள் கடுமையாக உழைக்கிறார்கள். அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. யாரும் அவர்களை தாக்கவில்லை.
பிரதமர் ஜாதி மத அரசியல் எல்லைகளை கடந்து பிரதமர் செயல்படவும், பேசவும் வேண்டும். ஆனால் பீகாரில் பிரதமர் பேசி இருப்பது. பீகார் – தமிழ்நாட்டிற்கு இடையே பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அவர் பேச்சு மலிவானது, கண்டனத்திற்குரியது.
தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் பீகாரியான ஆர். என்.ரவியை தான் தமிழ்நாட்டு மக்களின் தாக்குதலுக்கு உள்ளாகிறாரே தவிர வேறு யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
