திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தென்மாதிமங்கலம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமரன் தலைமையில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் ஒரு வாக்காளருக்கு ஒரு வாக்கு என்ற தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில், திமுக நிர்வாகிகள் கூட்டத்தின் போது சம்பந்தமற்ற கேள்விகளை எழுப்பி, தேர்தல் அலுவலரின் விளக்கத்தை ஏற்க மறுத்து, கூட்டத்தை பாதியிலேயே புறக்கணித்து மண்டபத்தை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் மண்டபத்தில் அமர்ந்து, ஒரு வாக்காளர் ஒரு வாக்கு என்ற நடைமுறையே நியாயமான ஜனநாயகத்தின் அடிப்படை என்று வலியுறுத்தினர். ஆனால் திமுக நிர்வாகிகள் இதற்கு எதிராக நடந்து கொண்டது, வாக்காளர் பட்டியல் வெளிப்படைத்தன்மையைப் பாதிக்கும் நடவடிக்கையாகக் கருதப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
முகாம் முடிவில், தேர்தல் அலுவலர் செந்தில்குமரன், ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரே வாக்கு உறுதிசெய்வது தேர்தல் ஆணையத்தின் முதன்மையான நோக்கம் என்றும், அனைத்து கட்சிகளும் இதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
