Saturday, December 27, 2025

லண்டனில் படித்த மாணவிக்கு கோவையில் காதல் திருமணம்! காவல் நிலையத்தில் பரபரப்பு…

நெல்லை பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் “இசக்கி பாண்டி”, இவர் ஒரு வழக்கறிஞர். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த வசதிமிக்க குடும்பத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றபோதும், வசதி மற்றும் குடும்பப் பின்னணி வேறுபாடுகள் காரணமாகப் பெண் வீட்டார் இவர்களின் காதலுக்குத் தீவிர எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதையடுத்து, காதலை மறக்கச் செய்யும் நோக்குடன், மாணவியின் பெற்றோர் அவரை மேல் படிப்புக்காக லண்டனுக்கு அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. எனினும், லண்டனில் இருந்தபோதும் காதலன் இசக்கி பாண்டி, செல்போன் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் மாணவியுடன் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார்.

சமீபத்தில், அந்த மாணவிக்கு 18 வயது பூர்த்தியடைந்த நிலையில், காதலன் இசக்கி பாண்டியின் திட்டப்படி அவர் லண்டனிலிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்குத் திரும்பினார். மும்பை அல்லது கொச்சி விமான நிலையம் வந்த அவரை, இசக்கி பாண்டியின் சித்தப்பா செல்வம் காரில் ஏற்றி, கோயம்புத்தூருக்கு அழைத்து வந்துள்ளார்.

கோயம்புத்தூர் வந்த காதல் ஜோடி, அங்குள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ஒருவருக்கொருவர் மாலையிட்டு, தாலி கட்டித் திருமணம் செய்துகொண்டனர்.

பின்னர், திருமணம் முடிந்த கையோடு, தங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய காதலர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை நாடினர். அப்போது, தகவலறிந்து அங்கு வந்த பெண்ணின் உறவினர்கள் காதலர்களை மிரட்டியும், தகராறில் ஈடுபட்டும் பிரச்சனை செய்தனர் தெரிகிறது.

இதையடுத்து, பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர். அங்கு வந்து சேர்ந்த பெண்ணின் உறவினர்கள், வெளியூருக்குப் படிக்கச் சென்ற தங்கள் வீட்டுப் பெண்ணை இசக்கி பாண்டி ஏமாற்றிக் கூட்டி வந்து கட்டாயத் திருமணம் செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டினர். மேலும், மணமகன் இசக்கி பாண்டியின் நடத்தையின் மீதும் புகார் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், உறவினர்களுக்கும், காதல் ஜோடிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, போலீசார் அவர்களை பந்தய சாலை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தந்தை உட்பட உறவினர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும், மாணவி தனது காதலன் இசக்கி பாண்டியுடன் வாழவே விரும்புவதாகவும், தங்கள் காதலில் உறுதியாகவும் இருப்பதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இளம்பெண் தனது முடிவில் உறுதியாக இருந்ததால், வழக்குப் பதிவு செய்ய முடியாமல் போலீசார் திணறினர். இரு வீட்டாரையும் சமாதானப்படுத்த எடுத்த முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில், இந்தப் காதல் ஜோடியை, எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர்களின் சொந்த ஊரான திருநெல்வேலிக்கே போலீசார் அனுப்பி வைத்தனர்.

திருநெல்வேலியில் லண்டனிலிருந்து வந்த மாணவிக்கு நடந்த காதல் திருமணம் மற்றும் அதைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் நடந்த அமளியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related News

Latest News