Saturday, December 27, 2025

கரூரில் 2-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் ஆய்வு! பொதுமக்கள் வாக்குவாதம்! காரணம் ‘இது தான்!’

கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பிரச்சார கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணை இரண்டாவது நாளாக சிபிஐ அதிகாரிகளால் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணி முதல், குஜராத்தைச் சேர்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் குமார் தலைமையிலான சிபிஐ குழு, 3டி லேசர் ஸ்கேனர் கருவி மூலம் சம்பவ இடத்தில் விரிவான ஆய்வை மேற்கொண்டது.

கடந்த செப்டம்பர் 27ம் தேதி நடைபெற்ற தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து, கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் அளித்த புகாரின் பேரில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர், உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

சிபிஐ குழு, வெள்ளிக்கிழமை முதல் சம்பவ இடம் மற்றும் அப்பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சிசிடிவி பதிவுகளையும் சேகரித்து வருகிறது. இன்று, “பாரா ஃபோக்கஸ்” என்ற நவீன 3டி ஸ்கேனர் கருவி மூலம் சம்பவ இடத்தின் ஒவ்வொரு பகுதியும் துல்லியமாக அளவிடப்பட்டது.

ஆய்வின்போது கரூர்–ஈரோடு சாலையில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டதால், பணிக்கு செல்லும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இதனால் சிலர் சிபிஐ அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், போலீஸார் சமரசம் செய்து மாற்று வழியாக அனுப்பினர். மாலை வரை நடைபெற்ற இந்த ஆய்வு, சம்பவத்தின் உண்மை நிலையை வெளிச்சமிடும் முக்கியமான படியாக கருதப்படுகிறது.

Related News

Latest News