வாகனங்களின் புகைப்படங்களை Upload செய்யாவிட்டால் ஃபாஸ்டேக் முடக்கப்படுமா? மத்திய அரசு விளக்கம்!

ஃபாஸ்டேக் பயன்படுத்தும் வாகனங்களின் விவரங்களைச் சரிபார்க்கும் நோக்கில், ‘Know Your Vehicle’ எனப்படும் புதிய நடைமுறையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இதன்படி, ஒவ்வொரு வாகன உரிமையாளரும் தங்கள் வாகனத்துக்கான விவரங்களை ஆன்லைனில் உறுதிப்படுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், நடைமுறை சிக்கல்கள் மற்றும் தொழில்நுட்ப பிரச்சனைகள் காரணமாக பல பயனாளர்கள் சிரமங்களை எதிர்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடைமுறையில் மாற்றம் செய்து, அதை எளிதாக்கியுள்ளது.

புதிய விதிமுறையின் படி, கார், ஜீப், வேன் போன்ற வாகனங்களின் பக்கவாட்டு புகைப்படங்களை சமர்ப்பிக்க தேவையில்லை. அதற்கு பதிலாக, வாகனத்தின் முன்பகுதி புகைப்படம், அதில் நம்பர் பிளேட் மற்றும் ஃபாஸ்டேக் தெளிவாக காணப்படும் வகையில் பதிவேற்றினால் போதுமானது என ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், KYV நடைமுறை அறிமுகப்படுவதற்கு முன்பு வழங்கப்பட்ட ஃபாஸ்டேக்குகள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என்றும், புகைப்படங்களை பதிவேற்றாததால் ஃபாஸ்டேக் உடனடியாக முடக்கப்படாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, வாகன உரிமையாளர்கள் தங்கள் ஃபாஸ்டேக் விவரங்களை சரிபார்க்க போதிய அவகாசம் வழங்கப்படும் என்றும், அதன் மூலம் நாட்டிலெங்கும் சுங்கச்சாவடிகளில் தடை இல்லாமல் வாகனங்கள் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

Related News

Latest News