சமூக ஊடக உலகில் முன்னணி தளமான இன்ஸ்டாகிராம், தற்போது தனது பயனர்களுக்காக புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், இனி யூசர்கள் தாங்கள் பார்த்த ரீல்களின் Watch History யை நேரடியாகப் பார்வையிடலாம். இதனால், தவறுதலாக ஸ்வைப் செய்தாலோ அல்லது அப்ளிகேஷன் ரீஃப்ரெஷ் ஆனாலோ பார்த்த வீடியோக்களை மீண்டும் தேடி காணும் வசதி கிடைக்கிறது.
இந்த அம்சம் புதிய ரீல்களில் இருந்து பழைய ரீல்கள் வரை அல்லது அதற்கு மாறாக கால வரிசைப்படி காட்டும். மேலும், ஒரு குறிப்பிட்ட தேதி அல்லது ஒரு காலப்பகுதியில் நீங்கள் பார்த்த ரீல்களைப் பட்டியலாகப் பார்க்கும் வசதியும் உள்ளது. அதோடு, தேவையற்ற வீடியோக்களை Watch History-யிலிருந்து நீக்குவதற்கான ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வசதியைப் பயன்படுத்த, யூசர்கள் Settings → Your Activity → Watch History என்ற வழியில் சென்று அணுகலாம். டிக் டாக் பிளாட்ஃபார்மில் ஏற்கனவே இந்த அம்சம் நடைமுறையில் உள்ளது. இன்ஸ்டாகிராம் இதனைப் பின்பற்றி, கடந்த வாரம், மாதம் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட தேதி வரம்புக்குள் பார்த்த ரீல்களைத் தெரிந்துகொள்ளும் வசதியை வழங்கியுள்ளது.
அதோடு, வீடியோக்களை ஆத்தர் வாரியாக அல்லது கால வரிசைப்படி பிரித்துப் பார்க்கவும் முடியும். இது தற்போது டிக் டாக்கில் இல்லாத அம்சமாகும். இந்த ‘Watch History’ அம்சம் நீண்ட நாட்களாக பயனர்கள் எதிர்பார்த்த ஒன்றாகும்.
இதற்கு முன்பு இழந்த வீடியோக்களை மீட்க, யூசர்கள் தங்களுடைய டேட்டாவை டவுன்லோட் செய்து தேட வேண்டியிருந்தது. புதிய அம்சம் மூலம் அந்த சிக்கல் தீர்க்கப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனம் இதன்மூலம் இன்ஸ்டாகிராம் ரீல்களின் அனுபவத்தை மேலும் மேம்படுத்தியுள்ளது.
