சென்னை கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் பகுதியில் உள்ள என் டி பட்டேல் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக, சேரும் சகதியுமாக காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பலமுறை அதிகாரிகளிடத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி அதிமுக கவுன்சிலர் சத்யநாதன் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்த பிரச்சனை தொடர்பாக இன்று என் டி பட்டேல் சாலையில் சுமார் 500 பேரை திரட்டி அவர் போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்.டி பட்டேல் சாலையில் உள்ள காலி இடத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கனரக வாகனங்கள் வந்து கட்டிடக்கழிவுகளை கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் சாலை குண்டும் குழியுமாக சேதம் அடைந்துள்ளது. இது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் பொதுமக்கள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் இரண்டு நாட்களில் பிரச்சனையை தீர்ப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டு சென்றார். அவர் கூறியபடி நிறைவேற்றி இருந்தால் தற்போது மக்கள் என்னிடம் வந்து முறையீடு செய்திருக்க மாட்டார்கள். இது தொடர்பாக மண்டல குழு கூட்டத்தில் மூன்று முறை பேசியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி ஜனநாயக நாட்டில் மக்கள் பிரச்சனையை பேசுவதற்கு கூட உரிமை மறுக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.
அவர் பேட்டி அளித்துக் கொண்டிருக்கும் போதே போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர். இருப்பினும் எத்தனை நடவடிக்கைகள் தன்மீது பாய்ந்தாலும் மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுப்பேன் என்று கூறினார். பின்னர் அவருடன் சேர்த்து 200 பேரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
