செங்கல்பட்டு - அரக்கோணம் ஒரு வழி ரெயில் பாதையை, 1,538 கோடி ரூபாயில் இரட்டை வழிப் பாதையாக மாற்ற, தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது. இது பயன்பாட்டிற்கு வந்தால், தினமும் 13 ரெயில்வே இயக்கும் இடத்தில், 40 ரெயில்வே வரை விரிவுபடுத்த முடியும்.
பயணிகள் ரெயில் மட்டுமின்றி, சரக்கு ரெயில்களும் கூடுதலாக இயக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்தத் தடத்தில் ஒற்றைப் பாதை இருப்பதால், பாலூர், வாலாஜாபாத், காஞ்சிபுரம் போன்ற ரெயில் நிலையங்களில் எதிரே வரும் ரெயிலுக்காகப் பல மணி நேரம் ரெயில்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இரட்டைப் பாதை அமைந்தால் இந்தத் தாமதம் குறையும். மேலும் அதிக எண்ணிக்கையிலான சரக்கு ரயில்களையும் தாமதமின்றி இயக்க முடியும்.
ரெயில்வே வாரியத்தின் ஒப்புதலைப் பெற்று கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்குவதற்கான முயற்சிகளை தெற்கு ரயில்வே மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
