கடந்த சில நாட்களாக நீர்வரத்தை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 111 அடியாக குறைந்து காணப்பட்டது.
இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் உபரிநீர் வரத்தும் அதிகரித்து காணப்பட்டன.
இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து கடந்த 20-ந் தேதி நடப்பாண்டில் 7-வது முறையாக அணை நிரம்பியது. அதே சமயத்தில் கர்நாடகாவில் இருந்து உபரிநீர் திறப்பு நேற்று காலை முதல் அதிகரிக்கப்பட்ட நிலையில், அந்த தண்ணீர் நேற்று மதியம் முதல் மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது.
இதைத் தொடர்ந்து, அணையில் இருந்து உபரிநீர் வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டது. இதன் காரணமாக சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர் ஆகிய 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை முதல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்ட, நிலையில் தற்போது, 65 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
