மழைக்காலங்களில் காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி போன்ற நோய்கள் அதிகம் பரவுகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதாவது Immunity-யை நல்ல நிலையில் வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். அதற்காக சில உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது உடலை பாதுகாக்க உதவும்
.
முதலில், விட்மின் C நிறைந்த உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். அதற்காக மாதுளை, ஆரஞ்சு, நெல்லிக்காய், எலுமிச்சை, கிவி போன்ற பழங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். சுகாதாரமான முறையில் இவற்றை சாப்பிடும்போது இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவே செய்கின்றன.
அடுத்து, மஞ்சள் முக்கியமான பங்கு வகிக்கிறது. இதில் உள்ள கர்குமின் (Curcumin) உடலின் அழற்சியை குறைத்து நோய்களைத் தடுக்கிறது. அதனால் ஒரு கப் வெந்நீரில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து குடிப்பது நல்லது.
இஞ்சி, பூண்டு, மிளகு போன்ற மசாலா பொருட்கள் சுவையை மட்டுமல்லாமல், உடலில் கிருமிகளை அழிக்கவும் உதவுகின்றன. குறிப்பாக இஞ்சிச்சாறு அல்லது பூண்டு சேர்த்த உணவுகள் நோயெதிர்ப்பு சக்தியை வளர்க்கும்.
மேலும், பச்சைக் கீரைகள், பீட்ரூட், முருங்கைக்காய், காரட் போன்ற காய்கறிகளில் நிறைந்த ஆன்டி-ஆக்ஸிடண்டுகள் உள்ளன. அவை உடலில் நச்சு பொருட்களை நீக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
மழைக்காலங்களில் கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீர் குடிப்பதும் முக்கியம். வெளியில் கிடைக்கும் எண்ணெய் உணவுகளை தவிர்த்து, வீட்டில் சமைத்த சூப், ரசம், மற்றும் கஞ்சி போன்ற எளிதில் செரிக்கும் உணவுகளை தேர்வு செய்தால் உடல் பாதுகாப்பு திறன் அதிகரிக்கும்.
இப்படி சத்தான உணவுகளைச் சரியாக உட்கொள்வது, மழை நோய்களைத் தடுக்க சிறந்த மருந்தாக இருக்கும்.
