தூய்மை பணியாளர்களுக்கு தினசரி இலவச உணவு வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு இன்று அனுமதி அளித்து உள்ளது. இதனையடுத்து, அவர்களுக்கு காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் இலவச உணவு வழங்கப்படும்.
இதேபோன்று தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு நல திட்டங்களையும் அரசு அறிவித்து உள்ளது. தூய்மை பணியாளர்கள் குப்பைகளை கையாளும்போது தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால், அதற்கு சிகிச்சை அளிக்க தனித்திட்டம் செயல்படுத்தப்படும்.
தூய்மை பணியாளர்களுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் இலவச காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும். பணியின்போது மரணம் அடையும் தூய்மை பணியாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்கள் சுய தொழில் தொடங்கும்போது அவர்களுக்கு ரூ.3.50 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும்.
சொந்த வீடு இல்லாத தூய்மை பணியாளர்களுக்கு 30 ஆயிரம் புதிய குடியிருப்புகள் கட்டி தரப்படும். கிராமப்புறங்களில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீட்டில் தூய்மை பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
