சென்னையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் தனியார் பயணிகள் விமானம், ஓடுபாதையில் ஓடத் தொடங்கியபோது இயந்திரக்கோளாறு ஏற்பட்டதால், ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தப்பட்டது.
சென்னையில் இருந்து திருச்சி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் 72 பயணிகள் 5 விமான ஊழியர்கள் உள்பட 77 பேர் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருந்தபோது, திடீரென இயந்திரக்கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். இதனால் விமானத்தை அவசரமாக ஓடுபாதையிலேயே நிறுத்தினார்.
பழுதடைந்து நின்ற விமானம், பின்னர் இழுவை வாகனம் மூலம் புறப்பட்ட இடத்துக்கு கொண்டு வரப்பட்டது. பயணிகள் 72 பேரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
