மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் ரெயில் நிலையத்தில் பயணி ஒருவர் ரூ.20-க்கு சமோசா வாங்கினார். அவர் ஆன்லைன் மூலம் பணம் செலுத்த முயன்றார். ஆனால் நெட்வொர்க் பிரச்சனை காரணமாக அவரால் பணத்தை செலுத்த முடியவில்லை.
அந்த நேரத்தில் அவர் வந்த ரெயில் புறப்படத் தொடங்கியது. கியூஆர் கோடை புகைப்படம் எடுத்துக் கொண்ட பயணி, பின்னர் பணம் செலுத்துவதாக சமோசா வியாபாரியிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வியாபாரி, பயணியின் சட்டையை பிடித்துக் கொண்டு பணம் செலுத்திவிட்டு தான் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
மீண்டும் பணம் அனுப்ப முயன்ற போது மீண்டும் அது தோல்வி அடைந்தது. இதனால் வேறு வழி இல்லாமல் தன்னுடைய ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் வாட்சை கழற்றி வியாபாரியிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. இதையடுத்து ரெயில்வே மேலாளர் சம்பந்தப்பட்ட வியாபாரியின் உரிமத்தை ரத்து செய்துள்ளார். மேலும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
