Sunday, December 28, 2025

ஒரே மேடையில் 2 பேரை திருமணம் செய்த வாலிபர்

கர்நாடக மாநிலத்தின் சித்ரதுர்கா மாவட்டம் ஹொரபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வாசீம் சேக், வயது 25. வேலைக்காக அவர் கோவாவிற்கு சென்றபோது அங்கு ஷைபா சேக் மற்றும் ஜன்னத் கந்தர் என்ற இரண்டு இளம்பெண்களுடன் பழகி நெருங்கிய தோழனாக மாறினார்.

நேரம் செல்ல செல்ல, வாசீம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்தார். இது குறித்து அறிந்த அவரது தோழிகள் இருவரும் அவரை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தனர். ஆரம்பத்தில் வாசீம் தயக்கமடைந்தாலும், அவர்களின் உறுதியான விருப்பத்தால் பிறகு சம்மதம் தெரிவித்தார். மூவரும் தங்களது குடும்பங்களிடம் பேசிக் கொண்டு அவர்களிடமிருந்தும் ஒப்புதலை பெற்றனர்.

இதையடுத்து கடந்த அக்டோபர் 16-ம் தேதி, வாசீம் சேக் ஒரே மேடையில் தனது இரு தோழிகளான ஷைபா சேக் மற்றும் ஜன்னத் கந்தரை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு மூவரது குடும்பத்தினரும் நெருங்கிய உறவினர்களும் மட்டுமே பங்கேற்றனர். திருமணத்திற்குப் பிறகு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் வாசீம், தனது இரு மனைவிகளுடன் மேடையில் குதூகலமாக நடனமாடி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

இத்திருமணத்தின் புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Related News

Latest News