பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆதரவாளர்கள், “அண்ணாமலை நற்பணி மன்றம்” என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கி, அதற்கான கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதுகுறித்த செய்தி ஊடகங்களில் வெளிவந்ததைத் தொடர்ந்து, அண்ணாமலை தனது X சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘திருநெல்வேலியில் எனது பெயரில் நற்பணி மன்றம் உருவாக்கப்பட்டு, கொடி அறிமுகம் செய்யப்பட்டதாகச் செய்திகள் வந்துள்ளன. என்னை நேசிக்கும் அனைவரின் அன்புக்கு நான் மிகுந்த நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆனால், இத்தகைய அமைப்புகள் மற்றும் கொடி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எனக்கு எந்த ஒப்புதலும் இல்லை,’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘எனது பெயர், புகைப்படம் போன்றவற்றைப் பயன்படுத்தி நடத்தப்படும் இத்தகைய செயல்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். எதிர்காலத்திலும் இத்தகைய நடவடிக்கைகளை தவிர்க்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்,’ எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து, ‘சுவர் இருந்தால்தான் சித்திரம். அதுபோல், ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கை மற்றும் குடும்ப நலனுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும். உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றிகள்,’ எனவும் அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலை வெளியிட்ட இந்தக் கருத்து, தற்போதைக்கு தனது பெயரில் தனிப்பட்ட அமைப்புகளை உருவாக்குவதை அவர் விரும்பவில்லை என்பதையும், ஆதரவாளர்கள் தங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கே முக்கியத்துவம் தர வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகிறது.
