Thursday, December 25, 2025

உணவு டெலிவிரி App-ஐ ஏமாற்றி உணவை ஸ்வாஹா செய்த நபர்., தலைசுற்ற வைத்த மோசடி!

ஜப்பானில் நகோயாவில் வசிக்கும் 38 வயதான டகுயா ஹிகாஷிமோட்டோ என்ற நபர், இரண்டு ஆண்டுகளில் 1,000க்கும் மேற்பட்ட இலவச உணவுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் செயலை அவர் ஜப்பானின் பிரபல உணவு விநியோக ஆப் டெமே-கேனில் உள்ள குறைபாட்டை பயன்படுத்தி செய்துள்ளார்.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தியின்படி, டகுயா வேலை இல்லாமல் இருந்த காலத்தில் தினமும் ஈல் பென்டோ, ஹாம்பர்கர் ஸ்டீக், ஐஸ்கிரீம் போன்ற விலையுயர்ந்த உணவுகளை ஆர்டர் செய்தார். உணவு வந்து சேராததாக புகார் அளித்து, அந்த ஒவ்வொரு ஆர்டருக்கும் பணத்தை திரும்பப் பெற்றார். இதனால், இரண்டு ஆண்டுகளில் நிறுவனத்திற்கு சுமார் 3.7 மில்லியன் யென், தோராயமாக 17 கோடி இழப்பு ஏற்பட்டது.

டகுயா இதைச் செய்ய 124 போலி கணக்குகளை உருவாக்கி, ஒவ்வொரு முறையும் புதிய பெயர், தவறான முகவரி மற்றும் போலி ஆவணங்களுடன் முன்பணம் செலுத்திய சிம் கார்டைப் பயன்படுத்தினார். இதனால் அவரை அடையாளம் காண முடியாது என அவர் நம்பினார். ஆனால், ஜூலை 30-ஆம் தேதி ஒருமுறை மேலும் ஆர்டர் செய்து பணத்தை திரும்பப் பெற முயற்சித்த போது, நிறுவனம் சந்தேகப்பட்டு போலீசுக்கு புகார் அளித்தது.

விசாரணையில், அவர் இதை 1,095 முறை செய்ததால் நிறுவனத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளார் என்று தெரியவந்தது. இதன் பின்னர், அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தினால், உணவு விநியோக நிறுவனங்கள் பாதுகாப்பு முறைகளை கடுமையாக செயல்படுத்தியுள்ளன. சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி வைரலாகி, நெட்டிசன்கள் டகுயாவின் முறைகேட்டை விமர்சித்து, ‘இந்த சிந்தனை நல்ல வேலைக்கு பயன்படுத்தப்பட்டிருந்தால், அவர் சிறந்த நிலையில் இருந்திருக்கலாம்’ என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

Related News

Latest News