அஜய் ரஸ்தோகி இந்தியாவின் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியாக சிறப்பான சட்ட நடவடிக்கைகளுக்கு பேர்போனவர்.
அஜய் ரஸ்தோகி 1958 ஜூன் 18ம் தேதி ராஜஸ்தான் மாநில ஜெய்பூரில் பிறந்தார். வழக்கறிஞர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர். வணிகத்தில் B.Com பட்டம் பெற்றார். பின்னர் சட்டப் படிப்பான LL.B முடித்தார்.
1982ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்யப்பட்ட அவர், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றினார். சேவைகள், தொழிற்சங்கம், அரசியலமைப்பு உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்றார்.
2004-ம் ஆண்டு செப்டெம்பர் 2-ம் தேதி அவர் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 2006-ம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 2016ம் ஆண்டில் ஒரு கால கட்டத்தில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் செயல் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார்.
2018 மார்ச் 1 அன்று திரிபுரா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், அதே ஆண்டின் நவம்பர் 2ம் தேதி இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றார்.
உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய காலத்தில், அவர் 150க்கும் மேற்பட்ட தீர்ப்புகளை வழங்கினார். மேலும் நில வழக்குகள், அரசியலமைப்பு விவகாரங்கள், மற்றும் பொதுநல வழக்குகளில் பல முக்கிய தீர்மானங்களில் பங்கு பெற்றார். நீதித்துறையின் சுமைகளை குறைக்கும் நடைமுறைகள் மற்றும் நீதித்துறைக்கும் நிர்வாகத்திற்குமிடையிலான இணக்கத்தை மேம்படுத்தும் குழுக்களை அமைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அஜய் ரஸ்தோகி 2023 ஜூன் 17 அன்று உச்சநீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்றார். நேர்மை, நியாய உணர்வு மற்றும் சட்டத்தின் மதிப்பை பாதுகாக்கும் மனப்பாங்கு ஆகியவற்றுக்காக அவர் உயர்ந்த மதிப்பைப் பெற்றார். அஜய் ரஸ்தோகி, இந்திய நீதித்துறையில் ஒரு நியாயம் நிறைந்த நீதிபதியாக என்றும் நினைவுகூரப்படுகிறார்.
இந்நிலையில் தற்போது, கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டள்ளது. விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
