சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத உயர்வை எட்டியுள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.91,400-ஐ கடந்துள்ளதால், பொதுமக்கள், குறிப்பாக திருமண ஏற்பாடுகளில் இருக்கும் குடும்பங்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர்.
சர்வதேச சந்தைகளில் முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிகம் முதலீடு செய்யத் தொடங்கியதாலும், உலக பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற சூழ்நிலையாலும் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்றும் தங்க விலை உயர்ந்ததால், நகை விற்பனை கடைகளில் வாங்குபவர்கள் குறைந்துள்ளனர். தங்க நகை விற்பனையில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.11,425 ஆகவும், இது நேற்று விட ரூ.85 அதிகம் என்றும், ஒரு சவரன் ரூ.680 உயர்ந்து ரூ.91,400 என புதிய உச்சத்தை தொட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், வெள்ளியின் விலையும் உயர்வை கண்டுள்ளது. தற்போது ஒரு கிராம் வெள்ளி ரூ.187 என்றும், ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.1,87,000-க்கு விற்கப்படுகிறது.
தங்க விலை உயர்வுக்கான முக்கிய காரணங்களில், உலகளாவிய பொருளாதார குழப்பம், பங்கு சந்தை நிலைமாறல், டாலர் மதிப்பு சரிவு, மத்திய வங்கிகள் தங்க கையிருப்பு அதிகரித்தல் ஆகியவை அடங்கும்.
மேலும், அரசியல் பதட்டங்கள், போர் சூழல் மற்றும் பணவீக்கம் போன்ற காரணிகளும் தங்கத்தின் தேவை மற்றும் விலையை உயர்த்துகின்றன. இந்தியா, சீனா போன்ற நாடுகளில் திருமண, விழா காலங்களில் ஏற்படும் அதிக தேவை இதை மேலும் உயர்த்துகிறது.
