Monday, December 22, 2025

ஓ கதை அப்படி போகுதோ? அதிமுக கூட்டணியில் விஜய்? சூசகமாக பேசிய அண்ணாமலை!

சென்னை சாலிகிராமத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவின் தாயார் அம்சவேணி உருவப்படத்திற்கு, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு கருத்துகளை பகிர்ந்தார்.

அவர் கூறியதாவது, ‘கரூர் என் சொந்த ஊர். அங்கு யாரும் வரலாம்; யாருக்கும் தடையில்லை. விஜய் கரூர் செல்ல விரும்பினால், அது அவரின் உரிமை. நாட்டில் யாரும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். டிஜிபியிடம் அனுமதி கேட்டு செல்லத் தேவையில்லை. கரூர் மக்கள் பண்புடன் வாழ்பவர்கள்; இறப்பு வீட்டுக்கு வரும் ஒருவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும்.

திருமாவளவன் உடன் சென்றவர்கள் வழக்கறிஞரை தாக்கியது தவறு. அந்தச் சம்பவத்துக்கு திருமாவளவன் தான் பொறுப்பு. அதேசமயம், ஆதவ் அர்ஜுனாவை தவெகவுக்கு அனுப்பிவிட்டு, இன்னும் பாஜகவையே விமர்சிப்பது திருமாவளவனின் இரட்டை நிலைப்பாடு. விடுதலை சிறுத்தைகளின் வாக்குகள் வேறு திசை செல்கின்றதால், அவர் பதற்றமடைந்துள்ளார்.

கோவையில் மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் வைப்பது சரியான முடிவு. ஆனால், அரசு பரிந்துரைத்த பட்டியலில் கருணாநிதி பெயர் இருந்தபோது எம்.ஜி.ஆர் பெயர் ஏன் இல்லை? தலைவர்கள் பெயர் விடுபட்டதால் சாதி பெயர்களை நீக்கும் அரசாணையை திரும்ப பெற வேண்டும்.

மேலும், பள்ளிகளில் மாணவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் முகாம் நடத்துவது கண்டிக்கத்தக்கது. அதிமுக கூட்டணிக்கு விஜய் வருவாரா என்பது குறித்து இப்போதைக்கு ஒன்றும் சொல்ல முடியாது; அதற்கு காலமே பதில் கூறும்,’ என்றார் அண்ணாமலை.

Related News

Latest News