மனநலக் குறைபாடுகளில் மிகவும் சிக்கலான ஒன்றாகக் கருதப்படுவது ஸ்கிசோஃப்ரினியா (Schizophrenia) ஆகும். இது பொதுவாக “மனச்சிதைவு நோய்” என அழைக்கப்படுகிறது. நோயாளியின் சிந்தனை, உணர்ச்சி, நடத்தை ஆகியவற்றில் தீவிர மாற்றங்களை உண்டாக்கும் இந்த நோய், உலகளவில் சுமார் 2 கோடி பேரை பாதித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு அதாவது WHO தெரிவித்துள்ளது.
ஸ்கிசோஃப்ரினியாவின் முக்கிய அறிகுறிகளில், இல்லாததை காண்பதாக உணர்தல் அதாவது Hallucination, Delusion என்று சொல்லப்படும் யாரோ தங்களைத் தொடர்ந்து வருகின்றனர் என்ற தவறான நம்பிக்கை, சீரற்ற சிந்தனை, தெளிவற்ற பேச்சு, அன்றாட வாழ்க்கையில் ஆர்வம் குறைதல், தனிமையை தேடுதல் போன்றவை அடங்கும். இந்த நோயின் ஆரம்பம் பெரும்பாலும் இளவயது அல்லது இளமைக்காலத்திலேயே தொடங்குகிறது.
மருத்துவ நிபுணர்கள் தெரிவிப்பதாவது, மரபியல் காரணங்கள், மூளையில் ஏற்படும் வேதிப்பொருள் மாற்றங்கள் மற்றும் குழந்தைப்பருவத்தில் ஏற்பட்ட மன அழுத்தங்கள் ஆகியவை முக்கிய காரணிகளாக இருக்கக்கூடும். ஸ்கிசோஃப்ரினியாவிற்கு முழுமையான குணமாக்கும் சிகிச்சை இதுவரை இல்லை. எனினும், மருந்துகள், உளவியல் சிகிச்சைகள் மற்றும் குடும்ப ஆதரவு மூலம் பாதிக்கபப்பட்டவர்களை சாதாரண வாழ்க்கைக்கு வழிநடத்த முடியும்.
இந்த நோய் குடும்பத்தினருக்கும் சமூகத்திற்கும் பெரும் சவால்களை ஏற்படுத்துகிறது. சரியான சிகிச்சை அளிக்கப்படாத நிலையில், பாதிக்கபப்பட்டவர்கள் தங்கள் வேலை, கல்வி, சமூக உறவுகள் அனைத்திலும் பின்னடைவை சந்திக்கின்றனர்.
எனவே, மனநலத்தை உடல்நலத்துக்கு சமமாகக் கருதி, சமூகத்தில் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என நிபுணர்களால் வலியுறுத்தப்படுகிறது. இதற்கிடையே இன்று உலக மனநல நாளாக கடைபிடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
