கோயம்புத்தூரில், கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 1,791 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட 10.10 கிலோமீட்டர் நீளமுள்ள ஜி.டி. நாயுடு மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
அரசு வெளியிட்ட தகவலின் படி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலம், தமிழகத்தில் இதுவரை அமைக்கப்பட்ட மிக நீளமான நான்கு வழித்தட மேம்பாலமாகும். இதனுடன், தரைத்தள சாலை ஆறு வழித்தடங்களாக விரிவுபடுத்தப்பட்டுள்ளதால் மொத்தம் பத்து வழித்தடங்கள் கொண்ட போக்குவரத்து வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேம்பாலத்தில், கோவை விமான நிலையம், ஹோப் காலேஜ், நவஇந்தியா, அண்ணா சிலை என நான்கு இடங்களில் இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா சிலையைத் தவிர்த்து, மற்ற மூன்று இடங்களில் ஏறுதளமும் உருவாக்கப்பட்டுள்ளது. 1.50 மீட்டர் அகல நடைபாதை, வடிகால் அமைப்பு, சைனஸ் பிளேட் விரிவு இணைப்புகள் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக சேர்க்கப்பட்டுள்ளன.
மேம்பாலத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு அமைப்பு உருவாக்கப்பட்டு, நிலத்தடி நீர்வளத்தை மேம்படுத்தும் முன்னோடியான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், நடுவண் பசுமை பகுதியில் சொட்டு நீர்ப்பாசனம், தரைமட்டத்தில் தெளிப்பு நீர்ப்பாசனம் ஆகிய முறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. மின்சார சேமிப்பு அதாவது சோலார் விளக்குகள், பாதுகாப்புச் சுவர்கள், ரோலர் தடுப்பு கருவிகள் ஆகியவையும் நிறுவப்பட்டுள்ளன.
இந்த மேம்பாலம் மூலம் கோவை நகரிலிருந்து விமான நிலையம் செல்லும் நேரம் 45 நிமிடத்தில் இருந்து 10 நிமிடமாக குறையும் எனவும், பொதுமக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், அவசர சேவை பயனாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பெரிதும் பயன்பெறுவார்கள் எனவும் அரசு தெரிவித்துள்ளது.