திருநெல்வேலியில் உள்ள தனது இல்லத்தில் பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“தி.மு.க. ஆட்சியில் நடக்கக் கூடாதவை எல்லாம் தொடர்ந்து நடக்கின்றன. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களைத் தொடர்ந்து, கரூரில் 41 படுகொலைகள் நடந்துள்ளன. காவல்துறை தடியடி நடத்தியுள்ளது. இதற்கு தி.மு.க. அரசுதான் காரணம். ஆனால், இதைக் கூட்டணியில் உள்ள திருமாவளவன், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தட்டிக் கேட்பதில்லை.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க நடிகர் விஜய் பாதுகாப்பு கோரி மனு அளித்துள்ளார். அவர் ஏன் தாமதமாகச் செல்கிறார் என்று கேட்கிறீர்கள். 41 பேரையே அடித்துக் கொன்றிருக்கிறார்கள். அங்கு சென்றால், விஜய்யின் உயிருக்கு யார் உத்தரவாதம் கொடுப்பது? அவரையும் அடித்துக் கொலை செய்துவிட்டால் என்ன செய்வது? பொதுமக்களுக்கே பாதுகாப்பு இல்லாத இந்த ஆட்சியில், விஜய்யின் உயிருக்கு 200 சதவீதம் ஆபத்து உள்ளது. இது முழுக்க முழுக்க தி.மு.க. அரசின் பொறுப்பற்ற செயல். மக்களைப் பாதுகாக்கத் தவறிய இந்த அரசுக்கு, வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
தற்போது நான்கரை ஆண்டுகள் ஆட்சி முடிந்துவிட்டது. இந்த ஆட்சியில் அரசுக்கு எதிரான மக்கள் மனநிலை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. மக்கள் தாங்களாகவே ஒன்றிணைந்து ஆட்சி மாற்றத்தை உருவாக்கப் போகிறார்கள். அதன் அடிப்படையில், அனைவரும் ஒரு குடையின் கீழ் வர வேண்டும்.
இந்த ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான ‘போக்சோ’ வழக்குகள் 283 சதவீதமும், பெண்களுக்கு எதிரான வன்முறை 55 சதவீதமும் அதிகரித்துள்ளன. மதுரையில் எல்லோருக்கும் பொதுவான தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் சிலையையே சேதப்படுத்துகிறார்கள் என்றால், இந்த ஆட்சி எவ்வளவு மோசமான ஆட்சியாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர் “தி.மு.க. அரசைக் கண்டித்து எனது சுற்றுப்பயணம் வருகிற 12-ந்தேதி மதுரையில் தொடங்குகிறது. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பீகார் தேர்தல் காரணமாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது. கரூர் சம்பவத்துக்குப் பிறகு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின்படி, வாகனத்தில் இருந்துதான் பிரச்சாரம் செய்வோம்”. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.