Thursday, October 9, 2025

பாஜகவிடம் இருந்து விஜய் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் : செல்வப்பெருந்தகை அறிவுரை

சென்னை முகப்பேர் பகுதியில் பாஜக வாக்குத்திருட்டில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவின் வாக்குத்திருட்டை கண்டித்து இரண்டு கோடி கையெழுத்துகளை பெறுவதாக இலக்கு வைத்து கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தேர்தலுக்காக பாஜக வாக்குத்திருட்டு எனும் மோசடி வேலையை கையில் எடுத்து ஜனநாயக நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு காங்கிரஸ் ஆளும் தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் தான் இருக்கிறது என்றும் கூறினார். தேர்தல் ஆணையத்தை கைக்குள் வைத்துக்கொண்டு உயிரோடு இருப்பவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் பாஜக இறந்தவர்களுக்கு வாக்குரிமை கொடுத்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

தேர்தல் ஆணையத்தை பாஜகவும் பாஜகவின் தொழில்நுட்ப பிரிவு அணியும் தான் கையில் வைத்திருக்கிறது என குற்றம் சாட்டினார். ஆறு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தற்போது உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ள தஷ்வந்த் என்பவர் வழக்கில் தமிழக அரசு சரியான முறையில் தான் வாதாடியது என தெரிவித்தார்.

பாஜக விஜயை மட்டுமல்ல தமிழகத்தையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைக்கிறார்கள் என்றும் தமிழ்நாட்டின் ஜனநாயக சக்திகள் அனைவரையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர விரும்புகிறார்கள் என்றும் குறிப்பிட்டார். அப்படி நினைப்பவர்களுக்கு விஜய் எம்மாத்திரம் என்று தெரிவித்தார். எனவே பாஜகவை கொள்கை எதிரி என்று அறிவித்த விஜய் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News