உங்கள் குழந்தைகள் எவ்வளவு நேரம் ஃபேஸ்புக், டிக்டாக், ஸ்னாப்சாட்டில் செலவழிக்கிறார்கள்? ஜாக்கிரதை! இந்த சமூக ஊடகங்கள், நம் இளைஞர்களின் மனநலத்தைப் பாழாக்குவதாகக் கூறி, நியூயார்க் நகரமே இந்த நிறுவனங்கள் மீது ஒரு பிரம்மாண்டமான வழக்கைத் தொடுத்துள்ளது.
நியூயார்க் நகரம், மெட்டா (Meta), கூகிள் (Google), பைட் டான்ஸ் (ByteDance) போன்ற டெக் நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டியுள்ளது. “நீங்கள் உங்கள் லாபத்திற்காக, இளைஞர்களை வேண்டுமென்றே உங்கள் செயலிகளுக்கு அடிமையாக்குகிறீர்கள். இதனால், எங்கள் குழந்தைகள் மனநல நெருக்கடிக்கு ஆளாகிறார்கள்” என்பதுதான் அவர்களின் குற்றச்சாட்டு.
இந்த வழக்கில் சொல்லப்பட்டுள்ள சில பகீர் உண்மைகளைப் பாருங்கள். நியூயார்க்கில் 77% உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஸ்கிரீன் முன்புதான் செலவழிக்கிறார்கள். இதனால், அவர்களுக்குத் தூக்கமின்மை, பள்ளிக்குச் செல்லப் பிடிக்காமல் போவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதற்காக, நியூயார்க் நகரம், மக்களின் வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் செலவு செய்ய வேண்டியுள்ளது.
இதுமட்டுமல்ல, ‘சப்வே சர்ஃபிங்’ (Subway Surfing) போன்ற ஆபத்தான சாகசங்கள் அதிகரித்து, பல இளைஞர்கள் உயிரிழப்பதற்கும் இந்த சமூக ஊடகங்கள்தான் காரணம் என்று நியூயார்க் குற்றம் சாட்டுகிறது. சமூக ஊடகங்களை ஒரு ‘பொது சுகாதார அபாயம்’ (Public Health Hazard) என்று நியூயார்க் அறிவித்துள்ளது. இந்த வழக்கில், நியூயார்க் நகரம் கோடிக்கணக்கில் நஷ்ட ஈடு கோரியுள்ளது. இந்த வழக்கு, உலகெங்கும் உள்ள அரசுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.