1874-ஆம் ஆண்டு அக்டோபர் 9-ஆம் தேதி சுவிட்சர்லாந்திலுள்ள பேர்ன் நகரில் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட தினமே சர்வதேச அஞ்சல் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மொத்தம் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
உலக அளவில் அதிக எண்ணிக்கையில் தபால் நிலையங்களை கொண்ட நாடு இந்தியா ஆகும். இ்ந்தியாவில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 333 தபால் நிலையங்கள் உள்ளன.
இதில் 89 சதவீதம் கிராமங்களில் உள்ளன. இந்தியா முழுவதும் 23 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 5 லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் இத்துறையில் பணிபுரிகின்றனர்.
தபால் துறைகளில் அரசு காப்பீடு திட்டங்கள், சேமிப்பு திட்டங்கள் என மக்களுக்கு பயன்படும் வகையில் பல நடவடிக்கைகளை இந்திய அஞ்சல் துறை எடுத்து வருகிறது.
ஸ்டாம்ப் விற்பனை, பதிவு தபால்,விரைவு தபால், இ-போஸ்ட், மணி ஆர்டர், பார்சல் சர்வீஸ் மற்றும் சேமிப்பு கணக்குகள் போன்ற பணிகளை தபால் துறை மேற்கொண்டு வருகிறது. தற்போது வங்கி வசதியும் தொடங்கப்பட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் உலகின் எந்த பகுதிகளில் இருந்தாலும் கூட தொலைபேசி மூலமோ குறுஞ்செய்தி மூலமோ நலம் விசாரிக்கின்றோம். ஆனால், மொபைல் பயன்பாடு வருவதற்கு முன்னர் கடிதங்கள் தான் மக்களுக்கு மகத்தான சேவையை புரிந்துள்ளது.