இந்தியாவில் சாலையோர கடை முதல் மிகப்பெரிய மால்கள் வரை அனைத்திலுமே யு.பி.ஐ. பரிமாற்றம்தான் முன்னிலை வகிக்கிறது. இதுவரை PIN Number, OTP போன்ற முறைகள் வழியாக யுபிஐ-யில் பரிவர்த்தனைகள் நடைபெற்று வந்தன. ஆனால், இவற்றுக்கு அடுத்த கட்டமாக ஆதார் அடிப்படையிலான முக அடையாள சரிபார்ப்பு நடைமுறைக்கு வர உள்ளது.
தற்போதைய நிலையில் ஆதார் மூலம் முகஅடையாள சரிபார்ப்பு முறை அரசுத் துறைகள் மற்றும் நலத்திட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனி இந்த முக அடையாள சரிபார்ப்பு முறையை வங்கி மற்றும் நிதி துறைகளில் செயல்படுத்திட ஆதார் முகமை அனுமதி அளித்துள்ளது.
இந்த புதிய நடைமுறை சோதனை அடிப்படையில் விரைவில் அமலுக்கு வர உள்ளது. அதனால், மக்கள் யு.பி.ஐ. வழியாக பணம் அனுப்பும்போது PIN Number-யை டைப் செய்யாமல், முகத்தை கேமிரா முன் காண்பித்தாலே பணம் தானாக பரிமாற்றம் செய்யப்பட்டு விடும்.
அதேபோல் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கும்போது ஓ.டி.பி. அல்லது பின் நம்பர் தேவையில்லை, முகத்தை காண்பித்தால் போதும் பணம் தானாக வெளியே வந்து விடும். இது தவிர கைரேகை முறையிலும் பணம் பரிமாற்றம் செய்யும் திட்டமும் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய முறை, பயனர்களின் பரிவர்த்தனைகளை வேகமாகவும், பாதுகாப்பாகவும் மேற்கொள்ள வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது.