உலகத்தில் பல அதிசய சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் ஒன்று தான் இது. அதாவது ஒரு சாதாரண கல்லை விற்று ஆறு மாதங்களில் 4 மில்லியன் டாலர் சம்பாதித்த கதை.
கலிபோர்னியாவைச் சேர்ந்த விளம்பர நிர்வாகி கேரி டால் (Gary Dahl), 1975ஆம் ஆண்டு நண்பர்களுடன் பொழுதை கழிக்க சென்றிருந்தார். இரவு ஆக, அவர்கள் வீட்டிற்கு செல்லத் தயாரானபோது, ‘என் செல்லப்பிராணியை கவனித்துக் கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளனர். செல்லப்பிராணிகளை பராமரிக்க அதிக சிரமமும் செலவும் ஆகிறது என்று அவர்கள் புலம்பியதும், கேரி டால், ‘அதற்குப் பதிலாக ஒரு கல்லை வளர்த்துக் கொள்ளலாமே’ என்று நகைச்சுவையாகச் சொன்னார். நண்பர்கள் சிரித்தாலும், அந்த யோசனையை அவர் தீவிரமாக எடுத்துக்கொண்டார்.
உடனே அருகிலிருந்த பூங்காவில் இருந்து சில கற்களை எடுத்து, காற்று செல்ல ஓட்டைகள் கொண்ட பாக்ஸில் வைத்து, அதனை “பெட் ராக்” (Pet Rock) என்று பெயரிட்டு விற்கத் தொடங்கினார். ஆச்சரியமாக, சில மணி நேரங்களிலேயே அனைத்தும் விற்று முடிந்தன. மேலும் பலரும் ஆர்வத்துடன் வாங்க விரும்பினர்.
பின்னர், கேரி டால் மெக்சிகோவில் இருந்து கற்களை இறக்குமதி செய்து, ஒவ்வொரு பெட்டியையும் 4 டாலர் விலையில் விற்பனை செய்யத் தொடங்கினார். மக்கள் இதனை ஒரு வித வேடிக்கையாகக் கருதி அதிக அளவில் வாங்கினர். சுமார் ஆறு மாதங்களில் 1.5 மில்லியன் பேர் “பெட் ராக்” வாங்கியதாகவும், அதில் இருந்து கேரி டாலுக்கு 4 மில்லியன் டாலர் லாபம் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், காலப்போக்கில் மக்கள் ஆர்வம் குறைய, இந்த வியாபாரம் மெதுவாக மறைந்து விட்டது. இருந்தாலும், ஒரு சாதாரண யோசனையும் சில நேரங்களில் எவ்வளவு பெரிய பொருளாதார வெற்றியை உருவாக்க முடியும் என்பதற்கான சிறந்த உதாரணமாக கேரி டாலின் கதை சொல்லப்படுகிறது.