உடலில் அதிக கொழுப்பு இருப்பதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி ஹூஸ்டன் மெதடிஸ்ட் மருத்துவமனையின் ஆய்வாளர்கள் நடத்திய சில முக்கிய ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் உடல் பருமனுக்கு ஆளாகின்றனர். வேகமான வாழ்க்கை முறை, வேலை, சுற்றுச் சூழல் மற்றும் உணவு பழக்கவழக்கங்கள், மன அழுத்தம் மற்றும் உடல் ரீதியான பிற பிரச்சனைகளும் உடல் பருமனுக்கு காரணமாகிறது.
சமீபத்தில் நடைபெற்ற ஆய்வில், உடல் பருமன் அளவுக்கு அதிகமாக இருந்தால் அது மறதி (அல்சைமர்) நோயைத் தூண்டும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஹூஸ்டனில் உள்ள ஹூஸ்டன் மெதடிஸ்ட் மருத்துவமனையின் ஆய்வாளர்கள், உடலில் சேரும் கொழுப்பில் உள்ள “எக்ஸ்ட்ராசெல்லுலர் வெசிகிள்ஸ்” எனப்படும் கொழுப்பு திசுக்கள், மூளையில் அமிலாய்டு-பி பிளேக் உருவாக்குகின்றன என்று கண்டுபிடித்தனர்.
இதனால் நியூரான்கள் பாதிக்கப்பட்டு மூளையின் செயல்பாடு குறைந்து, மறதி நோய் உருவாகும். இந்த கொழுப்பு திசுக்கள் உடல் மற்றும் மூளையிடையே தூதர்கள் போல செயல்பட்டு, பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த முக்கியமான ஆய்வு முடிவுகள் “தி ஜர்னல் ஆஃப் தி அல்சைமர்ஸ் அசோசியேஷன்” இதழில் வெளியிடப்பட்டுள்ளன. எனவே உடல் எடையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.