கடந்த 27-ந்தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கரூரில் பிரசாரம் செய்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இருவரும் முன் ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, வழக்கு விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த சூழலில், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் குறித்து சி.பி.ஐ.-க்கு மாற்ற மறுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வர உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.