தங்க நகை வாங்குவது முதலீடு என்ற வகையிலும் மதிப்பு மிக்க ஆபரணங்கள் என்ற வகையிலும் மிக முக்கியமானது. ஆனால் தங்கம் வாங்கும் போது சில விஷயங்களை கவனிக்காமல் விட்டால் நஷ்டம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ள அம்சங்களைத் தெரிந்துகொள்வது அவசியம்.
முதலில், நகையில் BIS ஹால்மார்க் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். ஹால்மார்க் என்பது தங்கத்தின் தரத்தைக் காட்டும் அரசு சான்றிதழ். தங்கத்தில் BIS லோகோ இருக்க வேண்டும். தங்கத்தின் சுத்தம் அதாவது 22 கேரட், அல்லது 916 போன்றவற்றை பரிசோதிக்க வேண்டும்.
மேலும் சோதனை மைய எண் தயாரிப்பாளர் மற்றும் நிறுவன குறியீடு ஆகியவை இருக்க வேண்டும். இவற்றின் மூலம் நகை 916 தரமுடைய உண்மையானதா என்பதை எளிதாக கண்டுபிடிக்கலாம். அடுத்து, நகை வாங்கும்போது ரசீது பெற்றுக் கொள்வது மிக முக்கியம். ரசீதில் நகையின் எடை, காரட், விலை, GST போன்ற விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். இது எதிர்கால விற்பனை அல்லது புதுப்பித்தலுக்கு உதவும்.
மேலும், BIS Care App மூலம் நகையை ஸ்கேன் செய்து உண்மைத்தன்மையை சரிபார்க்கலாம். ஹால்மார்க் சான்றிதழ் மற்றும் ரசீது இருந்தால், நகை எங்கே தயாரிக்கப்பட்டது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். இறுதியாக, எப்போதும் அங்கீகரிக்கப்பட்ட, நம்பகமான நகைக் கடைகளிலிருந்து மட்டுமே தங்கத்தை வாங்க வேண்டும். விலை குறைவாக இருப்பதை மட்டுமே பார்த்து வாங்கினால் போலி நகை வாங்கும் அபாயம் அதிகம்.
மொத்தத்தில், ஹால்மார்க், ரசீது, சான்றிதழ் ஆகியவற்றை சரிபார்த்து வாங்கினால் மட்டுமே தங்க நகையின் தரம் மற்றும் உண்மைத்தன்மை உறுதியாகும்.