இந்தியாவில் அமேசான், பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களும், செப்டோ, பிளிங்கிட் போன்ற குயிக் காமர்ஸ் சேவைகளும் பெருமளவில் பயன்பாட்டில் உள்ளன. சிறிய கிராமங்களிலிருந்து பெரிய நகரங்கள் வரை மக்கள் இந்த செயலிகளின் மூலம் பொருட்களை ஆர்டர் செய்து வருகின்றனர்.
ஆர்டர் செய்யும் போது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு விதமான கட்டண வசதிகள் தரப்படுகின்றன. ஒன்று யுபிஐ, நெட் பேங்கிங் போன்ற ஆன்லைன் முறைகள். மற்றொன்று கேஷ் ஆன் டெலிவரி அதாவது COD. ஆனால், கேஷ் ஆன் டெலிவரி தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களிடம் சில இ-காமர்ஸ் தளங்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து மத்திய நுகர்வோர் விவகாரத் துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததால், அதிகாரப்பூர்வமாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அந்தத் துறையின் அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘கேஷ் ஆன் டெலிவரிக்காக கூடுதல் கட்டணம் பெறப்படுவதாக பல புகார்கள் வந்துள்ளதால், அரசு இதை தீவிரமாக விசாரிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
விசாரணையின் போது, இ-காமர்ஸ் நிறுவனங்கள் மக்களை தவறாக வழிநடத்தி கூடுதல் பணம் பெற்றிருப்பது உறுதியானால், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதில் அபராதங்களும், சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இந்த சூழலில், நுகர்வோரின் உரிமையை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.