மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 12 குழந்தைகள் மரணத்திற்கு காரணமாகக் கோல்ட்ரிஃப் இருமல் மருந்து கூறப்படுகிறது. இது தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் செயல்படும் மருந்து நிறுவனம் விசாரணை வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த 15 நாட்களில், 1 முதல் 7 வயது வரையிலான 12 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணையில், உயிரிழந்த குழந்தைகள் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சென் பார்மா நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை உட்கொண்டிருந்தது உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குநர் குருபாரதி தலைமையிலான குழு அந்த ஆலையில் ஆய்வு மேற்கொண்டது.
ஆய்வின் போது, பேட்ச் 13-இல் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் உள்ளிட்ட 5 மருந்துகள் சோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டன. பரிசோதனையில், கோல்ட்ரிஃப் இருமல் மருந்தில் மட்டும் சிறுநீரகத்தை சேதப்படுத்தக்கூடிய டை எத்திலீன் கிளைகால் என்ற ஆபத்தான ரசாயனம் 48 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.
இதன் பேரில், சென் பார்மா நிறுவனத்தின் உற்பத்தி உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட்டது. மேலும், மாநிலம் முழுவதும் கோல்ட்ரிஃப் மருந்தின் விற்பனை மற்றும் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தையடுத்து, தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ‘கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டாம்’ என்று பொதுமக்களிடம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம், மருந்து உற்பத்தி தரநிலைகள் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.