கரூரில் த.வெ.க தலைவர் விஜய், கடந்த 27ஆம் தேதி பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் த.வெ.க பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் த.வெ.க தலைவர் விஜய் மற்றும் அவரது கட்சியினர் மீது சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பியது. மேலும், கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு விஜய் கரூர் செல்லாததும் கடும் விமர்சனத்தையும் எழுப்பியுள்ளது.
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து, சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, சிறப்பு புலனாய்வு குழுவிடம் விசாரணை ஆவணங்களை ஒப்படைக்கும் பணி தொடங்கியுள்ளது. கரூர் நகர காவல் நிலையத்தில் இருந்த விசாரணை ஆவணங்களை, காவல் ஆய்வாளர் சென்னைக்கு கொண்டு வருகிறார். சென்னையில் ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவிடம் இந்த ஆவணங்கள் ஒப்படைக்கப்பட உள்ளன.
மேலும், விஜயின் பரப்புரை வாகனத்தை பறிமுதல் செய்ய நாமக்கல் மாவட்ட காவலர்கள் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜயின் பரப்புரை பேருந்தை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில், 2 மணிநேர வீடியோ காட்சிகள், 30-க்கும் மேற்பட்ட செல்போன்களில் பதிவான வீடியோக்களை ஆய்வு செய்த நாமக்கல் காவலர்கள், விஜயின் பரப்புரை வாகனத்தை பறிமுதல் செய்ய முடிவு எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள மத்தியப் படைகள் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில், Y பிரிவில் இருந்து Z பிரிவாக மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
அதாவது, த.வெ.க தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள Y பிரிவு பாதுகாப்பில் எந்த மாற்றமும் தற்போது இல்லை என உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புலனாய்வு அறிக்கைகள் அடிப்படையில் பெறப்பட்ட பரிந்துரையின் கீழ், அவருக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் மாற்றம் செய்ய வேண்டும் என தற்போது எந்த பரிந்துரையும் இல்லை. எனவே பாதுகாப்பில் மாற்றமில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.