Sunday, October 5, 2025

த.வெ.க. விஜயின் பிரச்சார பஸ்! முடிஞ்ச்… பறிமுதல் செய்யப்படும் பிரமாண்ட அடையாளம்! நீதிமன்ற உத்தரவால் சறுக்கல்!

கரூரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, தேர்தல் பிரச்சார நெறிமுறைகளை வகுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், விபத்து நடந்த நிலையில் விஜய்யின் பிரச்சார பேருந்து தொடர்பாக வழக்கு ஏன் பதிவு செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பினர். மேலும், உடனடியாக அந்த பேருந்தை பறிமுதல் செய்யுமாறு உத்தரவிட்டனர். இதையடுத்து, அதிகாரிகள் பேருந்தை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

விஜய் பயன்படுத்திய பெரிய பேருந்தே கூட்ட நெரிசலுக்கு காரணமாக இருந்ததாக பல தரப்பினரும் கருத்து தெரிவித்த நிலையில், அவர் புதிய பேருந்தை பயன்படுத்த திட்டமிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதற்கிடையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் பறிமுதல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய இடங்களில் மக்கள் சந்திப்பை முடித்த விஜய், நாமக்கல்லில் தனது பயணத்தை நிறைவு செய்த பிறகு கரூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோதே இந்த துயரம் நிகழ்ந்தது.

41 பேர் உயிரிழந்த சம்பவம் த.வெ.க.க்கும், விஜய்யின் அரசியல் பயணத்துக்கும் பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. இதன் பின்னணியில், தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோருக்கான முன்ஜாமின் மனுவும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசல் மரணம், சட்ட நடவடிக்கைகள், ஆதரவாளர்களின் அதிருப்தி ஆகிய சவால்களை எதிர்கொள்ளும் விஜய், அடுத்து மக்களை எப்போது, எப்படிச் சந்திக்கப் போகிறார் என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் கேள்வியாக உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News