தற்போது ஊடகங்களில் பேசப்படும் பெயராக மாறியவர் புஸ்ஸி ஆனந்த். நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருப்பதோடு, அண்மைக்கால செயல்பாடுகள் காரணமாக விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை பெற்றுள்ளார். அண்மையில் கரூர் துயர சம்பவத்துக்கு பின் செய்திகளில் அவரது பெயர் இடம்பெறாத நாளே இல்லை.
புதுச்சேரியைச் சேர்ந்த புஸ்ஸி ஆனந்த், முன்னாள் அமைச்சர் அஷ்ரஃப்பின் உதவியாளராகவும், பின்னர் ரியல் எஸ்டேட் துறையிலும் ஈடுபட்டவராகவும் அறியப்பட்டார். அங்கு அவர் விறகுகடை வியாபாரம் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 2000-ம் ஆண்டு காலகட்டத்தில் எம்.எல்.ஏ ஆக வேண்டும் என்ற விருப்பத்துடன் புதுச்சேரியின் புஸ்ஸி தொகுதியில் களப்பணியில் ஈடுபட்டார். அங்கு மீனவர், முஸ்லிம் சமூகத்தினரிடம் விஜய் ரசிகர்கள் வலுவாக இருந்ததால், அவர்களின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார். இதன் காரணமாக விஜய் ரசிகர் மன்றத்தில் முக்கிய இடத்தைப் பெற்றார்.
பின்னர் காங்கிரஸ் கட்சியை விட்டு, கண்ணன் என்பவர் தொடங்கிய புதுச்சேரி முன்னேற்ற காங்கிரசில் இணைந்து, 2006-ஆம் ஆண்டு எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின் புதுச்சேரி விஜய் மன்றத்தின் பொறுப்பும், பின்னர் மாநில மட்டத்திலான பொறுப்பும் அவருக்கு கிடைத்தது. தற்போது அவர் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளராக உள்ளார்.
இப்போது கரூர் சம்பவத்தை அடுத்து, புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோருக்கு ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. இதற்கிடையே புஸ்ஸி ஆனந்த் தற்போது தலைமறைவாக உள்ளார். அவர்கள் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதை முன்னிட்டு, தவெக தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்.