ஒரு நாட்டின் தலைநகரையே மாற்ற முடியுமா? ஆம், முடியும். ஒருவேளை, அந்த நாட்டில் குடிப்பதற்குக் கூடத் தண்ணீர் இல்லை என்றால்! இப்படி ஒரு இக்கட்டான, அதிர்ச்சிகரமான சூழலைத்தான், ஈரான் நாடு இப்போது எதிர்கொண்டுள்ளது. நாட்டின் தலைநகரான டெஹ்ரானில், தண்ணீர் நெருக்கடி மிகவும் தீவிரமடைந்துள்ளதால், தலைநகரையே வேறு இடத்திற்கு மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று, அந்நாட்டு அதிபர் மசூத் பெஷேஷ்கியன் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
தெஹ்ரானின் இந்தக் கவலைக்கிடமான நிலைமைக்கு இரண்டு முக்கியக் காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று, கட்டுப்பாடற்ற மக்கள் தொகை பெருக்கம். மற்றொன்று, வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம். மக்கள் தொகை பெருகப் பெருக, தண்ணீர் தேவை அதிகரித்தது. ஆனால், நீர் ஆதாரங்களோ வறண்டு கொண்டே வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளாக, ஈரான் கடுமையான வறட்சியைச் சந்தித்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களில் மட்டும், மழைப்பொழிவு, சராசரி அளவை விட 40 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வறட்சி ஒருபுறம் இருந்தாலும், அரசின் தவறான நீர் மேலாண்மையே இந்தப் பிரச்சினைக்கு முக்கியக் காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுகின்றன. டெஹ்ரானுக்குக் கிடைக்கும் மொத்தத் தண்ணீரில், 25 சதவீதம், நீர் விநியோகக் குழாய்களில் ஏற்படும் கசிவுகள் மற்றும் தவறான மேலாண்மையால் வீணடிக்கப்படுவதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. மேலும், டெஹ்ரானில் வசிக்கும் 70 சதவீத மக்கள், ஒரு நாளைக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, அதிகமாகத் தண்ணீரைப் பயன்படுத்துகின்றனர்.
“இனியும் டெஹ்ரானைக் காப்பாற்ற முடியாது. நாம் பாரசீக வளைகுடாவை நோக்கி நகர வேண்டும்,” என்கிறார் அதிபர் பெஷேஷ்கியன். அதாவது, நாட்டின் தெற்குப் பகுதியில், கடல் ஓரமாக, திறந்த நீர் ஆதாரங்கள் உள்ள ஒரு புதிய இடத்திற்குத் தலைநகரை மாற்ற வேண்டும் என்பது அவரது திட்டம். “தலைநகரை மாற்றுவது, இனி ஒரு தேர்வு அல்ல; அது ஒரு கட்டாயம்,” என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு, இந்தத் திட்டத்தை அவர் முன்வைத்தபோது, கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், இப்போது நிலைமை கைமீறிப் போய்விட்டதால், வேறு வழியில்லை என்ற நிலைக்கு ஈரான் தள்ளப்பட்டுள்ளது.
ஒரு நாட்டின் தலைநகரமே, குடிதண்ணீர் பற்றாக்குறையால் காலி செய்யப்படும் அபாயத்தில் இருப்பது, உலக நாடுகள் அனைத்திற்கும் ஒரு எச்சரிக்கை மணியாகவே ஒலிக்கிறது. இயற்கை வளங்களை நாம் சரியாகப் பயன்படுத்தத் தவறினால், எதிர்காலத்தில் நமக்கும் இதே நிலைமை ஏற்படலாம்.