Tuesday, September 30, 2025

அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்! சிலிண்டர் முதல் வட்டி விகிதம் வரை எல்லாம் மாறுகிறது!

அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்தியாவில் பல துறைகளில் சில முக்கியமான மாற்றங்கள் நடைமுறைக்கு வர இருக்கின்றன. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையிலிருந்து ரயில் டிக்கெட் முன்பதிவு முறைகள், தேசிய ஓய்வூதிய திட்ட மாற்றங்கள் வரை பொதுமக்கள் கவனிக்க வேண்டிய பல்வேறு அம்சங்கள் உள்ளன.

முதலாவது, ஒவ்வொரு மாதத்தின் தொடக்க நாளிலும் எல்பிஜி சிலிண்டர் விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படும். கடந்த சில மாதங்களாக வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் எந்த உயர்வு அல்லது குறைப்பும் இல்லை. எனவே அக்டோபர் 1ஆம் தேதி விலை உயர்ந்தாலும், குறைந்தாலும், அது குடும்ப செலவுத் திட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

அதேபோல், ரயில் டிக்கெட் முன்பதிவில் மோசடிகளை தடுக்க இந்திய ரயில்வே புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது. அக்டோபர் 1 முதல், IRCTC இணையதளம் மற்றும் செயலியில் நடைபெறும் பொதுப் பதிவு தொடங்கிய முதலாவது 15 நிமிடங்களில் ஆதார் சரிபார்ப்பு செய்யப்பட்ட பயனர்களுக்கே டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்படும். இதற்கு முன்பு தட்கல் டிக்கெட்டுகளுக்கே இருந்த இந்த நடைமுறை, இப்போது அனைத்து டிக்கெட் முன்பதிவுகளுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது. நேரடி முன்பதிவு மையங்களில் இது பொருந்தாது.

தேசிய ஓய்வூதிய திட்டத்திலும் அதாவது NPS மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அக்டோபர் 1 முதல் Multiple scheme framework அறிமுகமாகிறது. இதன்மூலம் தனியார் மற்றும் கார்ப்பரேட் ஊழியர்கள் மட்டுமல்லாமல், Gig பணியாளர்களும் பான் எண்ணின் மூலம் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்யலாம். இது ஓய்வு கால நலனை மேம்படுத்தும்.

மேலும், ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழுக் கூட்டத்தில் 25 அடிப்படை புள்ளிகள் வரை வட்டி விகிதம் குறைக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் வங்கிக் கடன்களின் வட்டி விகிதமும் குறையக்கூடும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News