ராமநாதபுரம் – ராமேசுவரம் இடையிலான 53 கிலோமீட்டர் நீளமுள்ள ஒற்றை அகல ரயில் பாதையின் மின்மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதையடுத்து, சென்னை – ராமேசுவரம் இடையே பகல் நேரத்தில் வந்தே பாரத் ரெயிலை இயக்குவதற்கான திட்டத்தை தெற்கு ரயில்வே ரயில்வே வாரியத்திடம் சமர்ப்பித்துள்ளது.
தற்போது இந்த வழித்தடத்தில் பகல் நேரத்தில் எந்த ரயில் சேவையும் இல்லை. இரவு நேரத்தில் சேது சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், போட் மெயில் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட மூன்று தினசரி ரயில்களும், நான்கு வாராந்திர ரயில்களும் இயங்கி வருகின்றன. இத்தகைய சூழலில் வந்தே பாரத் சேவை தொடங்கப்பட்டால், தற்போது இயங்கும் ரயில்களில் காணப்படும் நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில்வே அதிகாரிகள் தெரிவித்ததாவது: “ராமநாதபுரம் – ராமேசுவரம் பாதை முழுமையாக மின்மயமாக்கப்பட்டுள்ளது. எனினும் உச்சிப்புளி ரயில் நிலையம் அருகே உள்ள பருந்து கடற்படை விமான நிலையம் பக்கத்தில் சுமார் 220 மீட்டர் தூரத்திற்கு மேல்நிலை மின்கம்பிகள் இல்லாத பகுதி உள்ளது. எனவே வந்தே பாரத் சேவை அறிமுகப்படுத்தப்படும் முன், அந்தப்பகுதியில் தனி சோதனைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், வந்தே பாரத் ரயிலின் இறுதி பாதை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. ரயில், சென்னையிலிருந்து ராமேசுவரத்தை எட்டு மணி நேரத்திற்குள் அடைய வேண்டியிருப்பதால், வழித்தடத்தை நிர்ணயிக்கும் முன் பயண நேரம் மற்றும் பாதையின் தன்மை முழுமையாக ஆய்வு செய்யப்படும்,” எனவும் தெரிவிக்கப்பட்டது.
இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், ராமேசுவரம் பயணிகளுக்கு வேகமான, வசதியான மற்றும் நவீன ரயில் சேவை கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.